அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது..
#கேள்வி:
நான் ஒரு பட்டதாரி ஆண். என் கல்லூரி நாட்களில் நான் செய்த குறும்பிற்கு அளவில்லை. என்னைக் கல்லூரியில் நிறைய பெண்கள் விரும்பினர். ஆனால், ஏனோ எனக்கு காதல் பிடிக்கவில்லை. எனக்கு இப்போது 34 வயது. இத்தனை நாட்கள் கட்டுக்கோப்புடன் இருந்த என் மனம், இப்போது சஞ்சலப்படுகிறது. நான் இப்போது ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளும், என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். என் பிரச்னை என்னவென்றால், அவளுக்கு திருமணமாகி விட்டது. அவள் வயது 22. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் சென்ற பின் தான், முதன் முதலில் அவளைப் பார்த்தேன். முதலில் இதை இனக்கவர்ச்சி என்று நினைத்தேன். ஆனால், அப்படியேதும் இல்லை என்று, நிச்சயமாக சொல்ல முடியும். அவளுடைய கணவன் கொஞ்சம் முன்கோபி. அதனால், அடிக்கடி அவளுக்கு அடி விழும். அவளை அரவணைக்க ஆள் இல்லாததால் தான், என்னை விரும்புகிறாளோ என்று, என் மனம் சில சமயம் சஞ்சலப்படும். அவளோ, “இருவரும் செத்துவிடலாம்’ என்றும், “கண்காணாத இடத்திற்கு போய்விடலாம்’ என்றும் கூறுகிறாள். அவள் கூறும் எதற்கும் நான் தயார். அவளில்லாமல் நான் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டேன். அவளைப் பார்க்காமல், என்னால் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியவில்லை; என்னால் நிம்மதியாக தூங்கவும் முடிவதில்லை. ஏனெனில், ஒரு திருமணம் ஆன, பெண்ணின் மனதைக் கெடுத்து விட்டோமோ என்ற, உறுத்தல் தான்.
ஆனால், இந்த எண்ணம் முழுவதும் அவளைப் பார்க்கும் வரைதான். அவளைப் பார்த்தவுடன், என் மனம் மாறி விடுகிறது. என்னால் அவளை மறக்க முடியவில்லை. நான் செய்வது சரியா, தவறா என்று எனக்கு தெரியவில்லை. தவறாக இருந்தாலும் என்னால் திருத்தி கொள்ள முடியவில்லை. ஏறக்குறைய நான் முக்கால் பைத்தியம் ஆகிவிட்டேன். என்னை உடன் பிறவா சகோதரனாக நினைத்து, நல்லதொரு நல்வழியை காட்டுங்கள்.
ஆலோசகர் #பதில்:
உங்கள் இருவரிடையே ஏற்பட்டுள்ள அன்பை, “காதல்’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்களேயானால் #சாரி. அது காதல் இல்லை.
நான் இப்படி சொல்வதற்காக வருத்தப்படக் கூடாது. ஒரு பெண்ணிடம் ஏற்படும் பரிவு, பச்சாதாபம், அன்பு, நட்பு இதெல்லாம் கூட, சில சமயங்களில் காதல்போல தோற்றமளிக்கும். காலப்போக்கில் அது, எந்த வகையை சேர்ந்தது என்பது புரிந்து விடும். ஆனால், அதற்குள், நாம் அவசரப்பட்டு, “இது காதல் தான்’ என்று முடிவு கட்டி, தாலி கட்டி, மேளம் கொட்டி, தனிக்குடித்தனம் போய், தனிமை இருட்டில், விட்டத்தை பார்த்து வெறித்தபடி, “நாம் செய்தது தப்போ’ என்று, யோசித்துக் கொண்டிருப்போம்.
காதலனும், காதலியும் நாள் முழுக்க ஒருவர், மற்றொருவரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்து, மாலையில் கடற்கரையிலோ, பூங்காவிலோ கொஞ்சநேரம் சேர்ந்திருந்து, மறுபடியும் பிரியும்போது, “மறுநாள் மாலை எப்போது வரும்… எங்கு சந்திப்போம்’ என்று நினைத்துக் கொண்டே பிரிகின்றனர். இந்த சமயத்தில், அவர்கள் இருவரது மனதிலும், இந்த ஒரு நினைப்பைத் தவிர, வேறு எதுவும் இருப்பது இல்லை. இருவரும் மணம் புரிந்து, ஒரே கூரையின் கீழ் வாழும்போது தான், ஒருவர் குறை மற்றவருக்குத் தெரிகிறது. காலை காபியிலிருந்து, இரவு படுக்கப்போகும் வரையில் சின்னதும், பெரிசுமாய் ஆயிரம் சச்சரவுகள்… அவள் அழும்போது முகம் ரொம்பவும் அசிங்கமாக இருப்பதுபோல அவன் உணர்கிறான்.
அதாவது, விலகி இருக்கும்போது மனதால் சேர்ந்திருந்தவர்கள், சேர்ந்து இருக்கும்போது, உள்ளத்தால் எங்கோ பிரிந்து போய் விடுகின்றனர். என்னதான் அந்தப் பெண்ணின் மீது உங்களுக்கு, உங்கள் பாஷைப்படி, அளப்பரிய காதல் இருந்தாலும், அவள் இன்றளவும் ‘இன்னொருவன் மனைவி’ என்பதை, நீங்கள் மறக்கக் கூடாது.
அவள்தான் சிறுபிள்ளைத்தனமாக, “செத்துப் போய்விடலாம்; ஓடிப் போய் விடலாம்’ என்று சொன்னாலும், நீங்கள் கொஞ்சம் விவேகமாய் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். ‘மாற்றான் மனைவியுடன் ஓடிப்போனான்’ என்கிற வார்த்தை, உங்களுக்கு தேவையா தம்பி… யோசியுங்கள்.
சரி, அவளைப் பிரிய முடியாது; வாழ்ந்தால் அவளுடன்தான் என்று நிச்சயம் செய்து விட்டீர்களானால், முதலில், அவளை, அவளது கணவனை விட்டு பிரிந்து வந்து, தாய் வீட்டில் இருக்கச் சொல்லுங்கள். ‘எனக்கு இவருடன் வாழ பிடிக்கவில்லை. விவாகரத்து வேண்டும்.’ என்று, வக்கீல்மூலம் மனு தாக்கல் செய்து, விவாகரத்து பெறச் சொல்லுங்கள்.
அதற்கு பின், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொறுத்து, பின், ஊரறிய அவளை மணந்து கொள்ளுங்கள். இது தான் முறை. இப்படியெல்லாம் நடக்குமா, புருஷன்காரன் விடுவானா என்றெல்லாம், கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.
இது ஒரு பக்கம் இருக்க, இப்போது நான் கூறுவது உங்களுக்கு…
எப்போதுமே தூரத்தில் வைத்து பார்க்கிற எந்தப் பொருளுமே, அழகாகத்தான் இருக்கும். எட்டாத உயரத்தில் இருக்கும் பூ, அடுத்தவன் தோட்டத்து மாங்காய், ஊரான் பொண்டாட்டி… இதெல்லாம் இதில் சேர்த்தி. கைக்கு வந்தவுடன், “ப்பூ’ இவ்வளவுதானா என்றாகி விடும். நாளைக்கு உங்களுக்குள் ஏதாவது சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வராது என்று சொல்லக் கூடாது; வரும். சம்சாரம் என்று இருந்தால் சண்டை நிச்சயம் உண்டு. அப்போது, “ஏற்கனவே, நீ என்கிட்ட ஓடிப் போயிடலாமா என்று கேட்டவள் தானே… உன் #புத்தி எனக்குத் தெரியாதா?’ என்று கேட்கத் தோன்றும்.
எதிர்வீட்டு, அடுத்த வீட்டு ஆண்களுடன் அவள் பேசினால், “ஓ, இவளுக்கு அதுக்குள்ள நாம அலுத்துட்டோம் போலயிருக்கு… புதுசு தேடுறாளோ…’ – இப்படிப்பட்ட சந்தேகங்கள் தோன்றும். இப்போது இல்லாவிட்டாலும், வயதானவுடன் தோன்றும்.
வாலிபத்தில், இல்லற தர்மமோ, முறையோ எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல் குதிக்கிற ஆண்பிள்ளைகள், வயதானவுடன் தன் மனைவியை மட்டுமன்றி, தன் மகளையும் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவர்.
அன்பு சகோதரரே… நீங்கள் இந்த நிமிஷத்தை மட்டும் நினைக்கிறீர்கள். நான் இருபது வருஷத்தையும் சேர்த்து கற்பனை செய் து பார்க்கிறேன். இன்னொன்று சொல்கிறேன்… உங்கள் காதலியின் கணவர் அடிக்கிறார், முன் கோபி. சரி.. நீங்கள் இரு கை நீட்டி அணைக்கக் காத்திருக்கிறீர்கள்… அவளுக்கு, கணவரின் சாதாரண கோபம்கூட பெரிதாகத் தானே தெரியும்? சின்னக் குழந்தையை அப்பா அடித்தால், “அழாதே கண்ணு இங்கே வா’ என்று யாராவது அழைத்தால், பாய்ந்து கொண்டு ஓடாதா.. இன்றைக்கு அடிப்பதும், நாளை அணைப்பதும் தாம்பத்யத்தில் சகஜமல்லவா… கணவரிடம் திட்டு வாங்கும் பெண்கள் எல்லாம், இப்படி வேறு ஒருவருடன் ஓடுவது என்றால், அத்தனை நன்றாக இல்லையே தம்பி. எதற்கும் யோசித்து முடிவெடுங்கள்.