யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனின் வாகனத்தை செலுத்திச் சென்று விபத்துக்குள்ளானவர் அவரது மூத்த மகன் என்றும் தற்போது பொலிஸாரினால் மதுபோதை பலூன் பரிசோதனை, வாக்குமூலம் பெறப்பட்டது இளைய மகன் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய வருகுறது.
ஆளும் கட்சி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளனர் என்று அந்த தகவல்கள் குறிப்பிட்டன.
இந்த நிலையில் இளைய மகனை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் உத்தியோகபூர்வ பதவிநிலை பெயர்பலகை கொண்ட வாகனம் விபத்துக்குள்ளாகியது.
வாகனம் விபத்துக்குள்ளான போது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனோ அவரது சாரதியோ பயணிக்கவில்லை என்று நேரில் கண்டவர்கள் உறுதிபடுத்தியதுடன், வாகனத்தை அவரது மூத்த மகனே செலுத்தினார் என்றும் கூறினர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபுறத்திலிருந்த மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தின் போது வீட்டின் முன்பாக நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிள் சேதத்துக்குள்ளாகியது.
தமிழ் கட்சி ஒன்றின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் பிறந்தநாள் விருந்தின் பின்னரே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காணப்பட்ட மாவட்ட செயலாளரின் பெயர் பலகையை பின்னர் காணவில்லை.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.